ஒரு நாகரீகக் கோமாளியின் ஒப்புதல் வாக்குமூலம் — பகுதி 2

Shanmugam Chinnappa
3 min readMar 30, 2018

வாழ்வியல் அடிப்படைக் கட்டமைப்பு — நீர் மற்றும் உணவு நிலைக்களன்

இதன் முந்தைய பதிவு இங்கே

உயிர்களின் முழு முதற் தேவையாகிய நீர்நிலைகளைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

#ஊருணி

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு

(அதிகாரம் — ஒப்புரவறிதல், குறள் எண் — 215)

பொருள் — உலகில் வாழும் உயிர்களை விரும்புகின்ற பெரிய அறிவினையுடையவனுடைய செல்வமானது ஊரார் எல்லோரும் நீருண்ணும் ஊருணி நீர் நிறைந்தது போன்றது.

ஊருணியின் அடிப்படையாகப் பின்வரும் கூறுகள் விளங்குகின்றன

· மழைக் காலங்களில் மழைநீரை ஊருக்குப் பொதுவான இடத்தில் சேமித்து ஊரார் அனைவரின் குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது

· அதிக நீர்ப்பிடிப்புத் தன்மையைத் தரும் பொருட்டும் , தூய்மையற்ற தண்ணீர் உள்ளே புகுந்துவிடாமலும் நாற்புறமும் அகண்ட கரைகள்

· அந்த அகண்ட கரைகளில், மழையை ஈர்க்கவும், நீர் ஆவியாவதைத் தடுக்கவும் வேம்பு, அத்தி, ஆல், அரசு, புங்கை போன்ற மரங்கள்

· மூலிகைகளாகப் பயன்படும் பல்வேறு நிலைத்திணைகளும் கரைகளில்

· கோடைக் காலங்களிலும் நீர் கிடைக்கும் வகையில் ஊருணிக்குள்ளேயே ஒரு கிணறு. வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ஊருணியில் நீர் நிறைந்திருப்பதால், கோடைக் காலங்களில் இந்தக் கிணறு பெரும்பாலும் வற்றுவதில்லை.

· நீர் ஆவியாகாமல் தடுக்க அல்லி, தாமரை போன்ற இலை அகன்ற நீர்நிலைத்திணைகள் தண்ணீர் தளத்தில் (இவற்றை அழித்துவிட்டு தெர்மாகோலைக் கொண்டு மூட பலகோடியில் திட்டம் வகுக்க நம் அரசியல்வாதிகளுக்கும் இஃது ஒரு வாய்ப்பு)

· மக்களிடம் ஊருணியைப் பாதுகாக்கும் எண்ணத்தை வளர்க்கக் கரையின் மருங்கில் ஒரு கோவிலை அமைத்து, ஊருணியை புனிதத் தீர்த்தமாகப் பாவிப்பது. எங்கள் ஊரில் அமைந்த ஊருணியின் பெயர் அம்மன் ஊருணி. இதன் கரையில் ஒரு கல்லை வைத்து ஊரே அம்மனாக வழிபட்டு வந்தது. ஊருணியை மாந்தக் கழிவுகளால் பாழ்படுத்தும் செயல் தெய்வக்குற்றமாகவே பார்க்கப்பட்டது.

· கோடைக் காலங்களில் ஊருணியைத் தூர்வாருவது, பொதுச் சேவையாக அறிவித்து ஒவ்வொரு குடும்பத்தையும் அதில் பங்குபெற வைப்பது

· தண்ணீர் குறைந்து கனிமங்கள் அடர்த்தியாகவும், நிலைத்திணைக் கழிவுகளுடனும் கிடைக்கும் நீரைத் தெளித்தெடுக்க தேற்றாங்கொட்டையைப் பயன்படுத்தியது. ”கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் நலம் பெற்றாள்” — கலித்தொகை.

· பெரும்பாலும் வருடம் முழுவதும் நீர் நிறைந்திருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அருகிலுள்ள நீர்நிலைகளுக்கும் நீர் நிலைக்களனாகத் திகழுவது

இன்னும் பல.

ஒரு சில இடங்களில் கால்நடைகளுக்கென்று தனியான ஒரு நீர்நிலை அமைக்கப்பட்டிருக்கும். சிறுவயதில் ஊருணியில் பருகிய நீரின் சுவை இன்னும் மனதில் நிற்கிறது. கனிம நீர் என்று இன்று நாம் வாங்கிப் பருகும் எந்திரங்களின் கழிவு நீர் எங்கே? இயற்கையாக ஊருணியில் கிடைக்கும் உண்மையான கனிம நீர் எங்கே?

இது போன்ற இயற்கை ஆதாரங்களை அழிப்பதற்கான சதியானது திட்டமிட்டே மக்களிடம் பரப்பப் பட்டதாகவே உணருகிறேன். பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஒருபக்கம் மாடு குளிப்பாட்ட, கழிவுநீர் கலக்க, துணிதுவைக்க அதை மற்றொரு புறம் குடிநீருக்கு எடுத்துச் செல்வது போன்ற ஒரு படத்தைப் போட்டு ஊர்ப் புறங்களில் இயற்கையாகக் கிடைக்கும் நீரானது தூய்மையற்ற நீர் என்ற பிம்பத்தை உருவாக்கியிருப்பார்கள். எனக்குத் தெரிந்து எந்த ஊருணியிலும் இதுபோன்று குடிநீரை பாழ்படுத்தும் மேற்கொள்ள இசைந்ததே இல்லை. குடிநீரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தே வந்தார்கள்.

கடந்த முப்பது நாற்பது வருடங்களில் ஊருணி மற்றும் இதர இயற்கை நீராதார மூலங்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று முழுமையாக அரசாங்கம் கொடுக்கும் தண்ணீருக்காகக் காத்திருக்கும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

· முதற்கட்டமாக கைவிசைப் பம்புகளைக் கொண்டு குடிநீர் மற்றும் வீட்டின் இதரத் தேவைகளுக்கு வழிவகை செய்யப்பட்டது. இது நீரின் நிலைக்களன் குறைந்த பகுதிகளுக்கு பயனுள்ளதாகவே அமைந்தாலும், நிலத்தடியில் இருந்து நீரை உறிஞ்சலாம் என்ற மனநிலைக்கு ஒரு பெரிய அடித்தளத்தை அமைத்தது. ஊருணி போன்ற நீரின் நிலைக்களன் உள்ள பகுதிகளும் இயற்கை நீராதாரங்களை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீரை உறிஞ்சத் தலைப்பட்டன.

· இயற்கையான நீர்நிலைகளில் கிடைக்கும் நீரானது தூய்மையான குடிநீர் அல்ல என்ற பரப்புரை மேற்கொள்ளப் பட்டது.

· கைவிசைப் பம்புகள் தங்கள் திறனை இழக்க ஆரம்பித்தபோது மின்விசைப் பம்புகள் அமைக்கப்பட்டு சில பத்து அடிகளில் உறிஞ்சப்பட்ட நீரானது, சில நூறு அடிகளிலிருந்து உறிஞ்சப்பட்டது.

· கூட்டுக் குடிநீர்த்திட்டம் என்ற பெயரில் ஆறுகளிலிருந்து நீரை உறிஞ்சும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது.

· சில நூறு அடிகளிலிருந்து உறிஞ்சப்பட்ட நீரானது சில ஆயிரம் அடிகளானது. இன்று அவற்றிலிருந்தும் அனைத்தையும் உறிஞ்சிவிட்ட நிலையில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஆங்காங்கே தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது.

மேற்கூறிய நிலத்தடி நீரை உறிஞ்சும் திட்டங்கள் அந்தந்தத் தருணங்களில் ஒருவகையில் மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தலைப்பட்டிருந்தாலும், நீண்டகாலத் தேவைகளைக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டன.

இத்தகைய நீர்நிலைகளின் அழிவுக்குக் குறைந்துவரும் மழைப்பொழிவும் ஒரு காரணமாகிலும், ஊருணி போன்ற அமைப்புகளை முழுவதுமாகப் புறந்தள்ளியதே முழுவதும் நிலத்தடி நீரைச் சார்ந்திருக்க வேண்டிய இன்றைய நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம். இன்றும் கூட கிடைக்கும் மழைநீரைக் கொண்டு இதுபோன்ற நீர்நிலைகளைப் பராமரிப்பது சாத்தியமே. மக்கள் தன்னிறைவு நிலையிலிருந்து அரசாங்கங்களை நம்பி வாழப் பழக்கப்படுத்தப்பட்டனர். தங்கள் வாழ்வியல் அடிப்படைகளை தாங்களே ஒன்றிணைந்து அமைத்துக் கொள்ள முடியும் என்ற மனநிலை மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப் பட்டது. மக்கள் தங்களைச் சார்ந்திருக்கச் செய்யும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியாகவும் இதைப் பார்க்கலாம். நீராதாரத் திட்டமென்றால் சில இலட்சம் அல்லது கோடி ரூபாய்களில் அரசாங்கத்தினால் மட்டுமே செயல்படுத்தமுடியும் என்ற ஒரு நம்பிக்கை விதைக்கப் பட்டுவிட்டது. இது போன்ற திட்டங்களே தங்களின் வருமானத்தை வளப்படுத்தும் என்ற அரசியல்வாதிகளின் கணக்கும் பலித்துவிட்டது. நகர்ப் புறங்களுக்கு இஃது எவ்வளவு பொருந்துகிறதோ, ஊர்ப் பகுதிகளில் இதுவே உண்மை.

இன்றைய அத்தியாவசியத் தேவையாக நான் பார்ப்பது புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களோ, ஆறுகளை இணைப்பதோ, கடல் நீரை மறுசுழற்சி செய்வதோ அன்று. மாறாக மக்கள் முதலில் தங்கள் நீராதாரங்களை தாங்களே பெருக்கிக் கொள்ளக் கூட்டுத் திட்டமிடுவது, அழிந்து கொண்டிருக்கின்ற இயற்கை நீராதாரங்களைப் புதுப்பித்து நீண்ட காலப் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது, தங்கள் பகுதிகளில் இயன்ற அளவு மழையைத் தருவிக்கும் மரங்களை நட்டுப் பராமரிப்பது போன்றவையே. நிலத்தடி நீர் என்பது அடுத்து வரும் தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு நிலத்தடி நீர் உறிஞ்சுதலை அறத்துடன் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் இருக்கவே செய்கிறது. ஊர் கூடினால் தேர் இழுக்கலாம்.

நீருடனே பயணிக்கலாம் அடுத்த பதிவிலும்…

--

--

Shanmugam Chinnappa

Chief tech problem solver, passionate with sustainable living and learning practices